பயனர்:வை.வேதரெத்தினம்
முன்னுரை
[தொகு]”செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்றார் வள்ளுவர். நாம் இந்தக் குறளைப் புரட்டிப் போட்டு “வயிற்றுக்கு உணவு இடாத போது, சிறிது செவிக்கும் ஈயப்படும்” என்பதாக நடைமுறையில் பின்பற்றுகிறோம் ! சமையற் கலை பற்றி எல்லாத் தொலைக்காட்சிகளும் நாள்தோறும் நேரலையாக நிகழ்ச்சிகள் நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். சுவையாகச் சமையல் செய்வதே ஒரு கலை தான் !
சமையல்
[தொகு]சில காய்களைப் பச்சையாக உண்ணலாம். ஆனால், பெரும்பாலான உணவுப் பொருள்களைச் சமைத்துத் தான் உண்ண வேண்டும் !சமைத்தல் என்றால் என்ன ? அரிசி, இறைச்சி, தானியங்கள், காய்கள், போன்றவற்றை அவித்தோ, வறுத்தோ, வதக்கியோ, பொரித்தோ, துவட்டியோ, வேகவைத்தோ அல்லது வேறு வகையிலோ உண்பதற்கு ஏற்ற வகையில் பக்குவப்படுத்துவதே சமையல் !
அடுத்தல்
[தொகு]சமையல் செய்வதை ”அடுத்தல்” என்று முன்பு சொல்லி வந்தோம்.. ”அடுத்தல்” செய்ய உதவியது “அடுப்பு” ”அடுத்தல்” செய்யும் மனை “அடுமனை” (Bakery). கோயில்களில் உள்ள சமையற் கூடமான மடைப் பள்ளிக்கு “அடுகை மனை” என்று பெயர் ! அடுக்கப் பெற்றுக் கிடைப்பது தான் “அடை”. கிழங்கு அடை, முசு முசுக்கை அடை, என்ற சொற்கள் எல்லாம் இதன் அடிப்படையில் தோன்றியவையே !
இலக்கியச் சொல்
[தொகு]”அடுத்தல்” நடைபெறும் இடம் “அடுக்களை”. ”அட்டில்” என்பதும் அடுக்களை”யைக் குறிப்பதே.”அறம் நிலைஇய அகன் அட்டில்..” “ விருந்து உண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில்...”என்றெல்லாம் பேசுகிறது பட்டினப்பாலை ! ( வரி;43, 262) இச்சொற்களை இக்காலத்தில் “கிச்சன்” விழுங்கிவிட்டது. அடுத்தல் செய்ய உதவும் கலன் (Utenzil) “அடுகலன்” !
சமைக்கும் கலன்
[தொகு]சமையல் செய்வதற்கு உதவுகின்ற கலன்களில் (Utenzils) ஒன்று தான், நாம் பயன்படுத்தி வரும் “பிரஷர் குக்கர்” இந்த “பிரஷர் குக்கர்” (Pressure Cooker). என்ன செய்கிறது ? அதனுள் இடப்படும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை அவித்துத் தருகிறது. அவிப்பதற்கு நீரும், நீரினால் உண்டாகும் ஆவியின் அழுத்தமும் பயன்படுகிறது !
அவித்தல்
[தொகு]அவித்தலும் வேக வைத்தலும் ஒரே செயலைக் குறிப்பனவா அல்லது வெவ்வேறு செயல்களா ? நிலக் கடலையை அவிக்கும் போது வெப்பமானது நீர் வழியாகக் கடலைக்குக் கடத்தப்படுகிறது. அரிசியை வேக வைக்கும்போதும் வெப்பமானது நீரின் மூலம் தான் அரிசிக்குக் கடத்தப்படுகிறது !இவ்விரண்டு நேர்வுகளிலும் என்ன நிகழ்கிறது ? பற்களால் அரைப்பதற்குக் கடினமாக இருக்கும் கடலையும் அரிசியும், நீர் மூலம் வெப்பப் படுத்தப் பெற்று உண்பதற்கு ஏற்ற வகையில் மென்மைப் படுத்தித் தரப்படுகிறது !
அவித்தலும் வேகவைத்தலும்
[தொகு]அவித்தல், வேக வைத்தல் இரண்டிலுமே கடினமான உணவுப் பொருள்கள் நீரின் மூலம் வெப்பப் படுத்தப்பெற்று மென்மையாக்கித் தரப்படுகிறது.. ஆகையால் ”அவித்தல்” “வேகவைத்தல்” இரண்டுமே ஒன்று தான் ! ”குக்கர்” மூலம் அரிசி, கோதுமை, கம்பு போன்ற தானியங்களும் காய்கள், கிழங்குகள் ,கீரைகள், பூக்கோசு போன்ற தாவரப் பொருள்களும், ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி போன்ற புலால் வகைகளும் வேகவைக்கப்பட்டு, சமையலுக்குப் பக்குவப் படுத்தப்படுகின்றன ! வேறு வகையில் சொன்னால், குக்கருக்குள் இடப்பட்டு அவிக்கப்பட்டுப் பக்குவப் படுத்தப்படுகின்றன !
பல்லவி
[தொகு]இவ்வாறு தன்னுள் இடப்படும் பல வகையான உணவு (மூலப்) பொருள்களையும் அவித்துத் தரும் கலன் என்பதால் “குக்கர்” என்பதை “பல் வகை உணவுப் பொருள்கள் அவி கலன்” என்று சொல்வதில் தவறேதுமில்லை. இதை இன்னும் சுருக்கினால் “பல்லுணவு அவிகலன்” என்று அமையும். இச்சொல்லை இன்னும் சுருக்கி “பல்லவி” என்றால் சாலவும் பொருந்தும் !
இலக்கணம்
[தொகு]“பூங்கொடி” வந்தாள் என்னும் தொடரில் வரும் “பூங்கொடி” என்னும் சொல் உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை என்ற இலக்கணத்தின்படி அமைகிறது ! அதுபோல “பல்லவி” என்ன விலை என்ற தொடரில் ”பல்லவி” என்னும் சொல்லும் அன்மொழித் தொகையாக அமைகிறது !
குக்கர்
[தொகு]”குக்கர்” என்ற ஆங்கிலச் சொல் பற்றி நாம் குறைசொல்வது இல்லை. அந்தச் சொல் பொருத்தமில்லை என்று ஆங்கில இலக்கண அறிஞர்கள் யாரும் குறை சொல்வதுமில்லை ! தமிழில் ஒரு சொல்லை யாராவது பரிந்துரைத்தால், அதற்கு மாற்றுச் சொல் ஏதும் நம் மனதில் தோன்றாத வரை, அதை அப்படியே ஏற்பது சால்புடையதாக இருக்கும். மாற்றுச் சொல் இருப்பின் அதைத் தவறாது பரிந்துரைப்பதும் சால்புடையதே ! மாற்றுச் சொல் காண இயலாத போது “பரிந்துரைக்கப்பட்ட” சொல் பற்றிக் குறை காண்பது தவிர்க்கப்பட வேண்டும் !
குக்கர்|பல்லவி
[தொகு]இன்னும் எத்துணை காலத்திற்குத் தான் “குக்கர்” என்று சொல்லிக் கொண்டிருப்பது ? இனி “பல்லவி” நமக்குப் பயன்படட்டும் !“பல்லவி”யின் அடிப்படையில் தோன்றும் பிற சொற்களையும், காண்போமா ?
COOKER................................= பல்லவி
PRESSURE COOKER...........= (ஆவிப்) பல்லவி
ELECTRIC COOKER............= மின் பல்லவி
(பி.கு: pressure அடிப்படையில் தான் Cooker செயல்பாடு அமைகிறது ஆகையால் ஆவிப் பல்லவி என்று சொல்ல வேண்டியதில்லை. “பல்லவி” என்று சொன்னாலே போதும் !
-----------------------------------------------------
'ஆதாரம் :'புதிய சொல்லாக்கம் வலைப்பூ.https://puthiyachol.blogspot.com/2021/12/19-cooker.html