பேச்சு:எப்பொழுதும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இப்படியான சொற்களை இடுவது சரியா? இதனை நீக்கலாமா?. எப்பொழுதும் என்பதின் ஒரு திரிந்த, கொச்சை வடிவம் எப்பவும். உள்ளேயும் பிழையாக எடுத்துக்காட்டு சொற்றொடர் தரப்பட்டுள்ளது. நற்கீரன் இப்படியானவற்றைச் சேர்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.--செல்வா 03:55, 8 ஆகஸ்ட் 2010 (UTC)


பேச்சுத் தமிழை கொச்சை வடிவம் என்று கூறுவது சரியல்ல. நெடுங் காலமாக, ஐரோப்பியர் வரும் வரை பேச்சுத் தமிழ் புறக்ககணிக்கப்பட்டே வந்துள்ளது. எப்பொழுதும் என்பதற்கு வழிமாற்றுச் செய்து, எப்பவும் என்ற சொல்லைப் பற்றியும் விளக்கலாம். --Natkeeran 23:38, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

நற்கீரன், பேச்சு வழக்கை முதன்மைப்படுத்துவது தமிழை அழிக்கும் ஓர் உத்தி. இதனால் வரும் கேடுகள் பல. பேச்சு வழக்கை முதன்மைப்படுத்தினால் ஒரு மொழியாக இருப்பது 200-300 மொழிகளாக சிதறும். இதைப் பற்றி விரிவாகப் பேசலாம். மொழியியலாளர்கள் சிலர் கூறுவதைக் கண்டு மயங்காதீர்கள். ஆங்கிலத்தில் t என்னும் ஓரெழுத்தை 90 வகையாக ஒலிக்கிறார்கள் என்று பெ'ல் தொலைபேசி செய்கூடம் (Bell Telephone Labs) ஆய்வாளர் முனைவர் சான் பியர்சு (Dr. John R. Pierce) கூறுகின்றார் (பார்க்க: Mother tongue, by Bill Bryson பக்கம் 87). இவற்றையெல்லாம் அகராதியில் பதிவு செய்கிறார்களா என்று பாருங்கள். ஆங்கில அகராதியில் தரும் ஒலிப்புடன் பேச்சு மொழி ஆங்கிலத்தின் ஒலிப்பு இல்லை. house என்னும் சொல்லை அவர்கள் 12 வகைக்கும் மேலான முறைகளில் ஒலிக்கின்றனர். இவற்றை எல்லாம் அவர்கள் அகராதியில் தருவதில்லை. அவர்கள் ஆங்கிலம் பேசும் ஒலிப்பு, இடத்துக்கு இடம், இனத்துக்கு இனம் மாறுபடுகின்றது. அவர்கள் idolect என்று கூறுவர். புகழ்பெற்ற பெர்னார்டு சா^ அவர்கள் எழுதிய பிக்மேல்லியன் (Pygmalion) என்னும் நூலில் "Ow, eez ya-ooa san, is e? Wal, fewd dan yi da-ooty bawmz a mather should, eed now bettern to spawl a ore gel's flahrzn than ran awy atlhaht pyin" என்று எழுதுகின்றார். என்னவென்று கண்டுபிடியுங்கள்!! "Oh, he is your son, is he? Well, if you'd done your duty by him as a mother should, he would know better than to spoil a poor girl's flowers, then run away without paying (quoted from Mother Tongue, p. 110). ஆயிரக்கணக்கான சொற்களை மிகவும் வேறான முறையில் ஒலிக்கின்றனர். ஒரு 6-7 புத்தகங்களை எடுத்துக் காட்ட இயலும். பேச்சுத்தமிழை முன்னிறுத்துவதில் கணக்கற்ற அரசியல் உள்ளது, இவற்றை இங்கு விரித்துப் பேசுவது இயலாது. மேலோட்டமாகப் பார்த்தால் இவை நேர்மையானவை போல் தோற்றம் அளிக்கும். பல அடிபப்டைகளை இவர்கள் உணராதது மட்டுமல்லாமல், பெருங்கெடுதிதரும் அரசில் உள்ளது. தமிழை வேண்டுமென்றே கெடுத்தழிக்க உழைப்பவர்களோடு துணை செல்லாதீர்கள். --செல்வா 00:28, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
வட்டார மொழியில் சாதி, பிரதேச அடையாளங்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால் பேச்சு வழக்கை புறுக்கணித்தல் என்பது எமது இயல்பை மறுப்பதாகும். இத்தனை விதமாகத் தமிழர்கள் பேசுகிறார்கள் என்பது பேச்சு வழக்குக்குச் சார்பான வாதமாக பார்க்கவில்லை. பொது எழுத்து மரபையும், பல்வேறு வட்டார பேச்சு வழக்குகளையும் கொண்டிருப்பதை குறையாகக் மட்டும் கருத முடியாது. அது தமிழின் வளைவுத் தன்மையையும், வளத்தையும் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதலாம் என்று நான் கருதவில்லை. ஆனால் ஒர் அகராதியில் குறிப்பது முறையே என்று கருதுகிறேன். மேலும் ஆவணப்படுத்தல் என்பது ஒன்றை முதன்மைப் படுத்துவதாக அமையாது. கலர், டீ என்று பல நூறு ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதியிருப்பதைக் கவனிக்க. ஆங்கிலத்தில் கனடிய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம், ஐ.இரா ஆங்கிலம் என்று இருப்பதை நோக்குக. இங்கு ஒரு முறை நான் அமெரிக்க ஆங்கில சொல் திருத்தியைப் பயன்படுத்தி சமர்பித்த கட்டுரை ஒன்றின் சில சொற்களைக் கோடிட்டு அவை கனடிய சொற்கூட்டல் முறை இல்லை என்று அறிவுறுத்தி இருந்தார்கள். --Natkeeran 00:37, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
நற்கீரன், ஐ.இரா, அமெரிக்க வழக்கு என்பது வேறு பேச்சு மொழி என்பது வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆங்கில அகராதி house என்பதை 12-13 விதமாகக் கூறுவதைப் பதிவு செய்வதில்லை. Water என்பதைப் பேச்சு வழக்கில் wader என்பதையோ, நியூ யார்க்கில் murder என்பதை moider என்பதையோ பதிவு செய்வதில்லை. இலங்கைச் சொற்களைப் பதிவு செய்யுங்கள், வட்டாரச் சொற்களைப் பதிவு செய்யுங்கள், ஆனால் கொச்சையான பேச்சு வடிவங்களைப் பதிவு செய்யாதீர்கள். அகராதி என்பது எல்லாவற்றையும் பதிவு செய்யும் இடம் இல்லை. இதில் தேர்வு உண்டு. thoidy-thoid என்பது thirty-third என்று காட்டத்தேவை இல்லை. ஒலிப்புகளில் மிகப்பல உள்ளன ஐ.இரா. அமெரிக்கா என்ற இரண்டை மட்டும் (அதுவும் சீர்தரம் செய்த ஒலிப்புகளை மட்டும்) ஏன் இடுகிறார்கள்? சொற்கள் வேறு, பேச்சு வழக்கில் சொற்கள் ஒலிக்கும் வகை வேறு. சொற்களைப் பதிவு செய்வதை வேண்டாம் என்று கூறவில்லை (இங்கும் தேர்வு செய்யலாம், எல்லாம் பதிவாக வேண்டும் என்று ஏதும் இல்லை), பேச்சு வழக்கு கொச்சை ஒலிகளை முதன்மைப் படுத்த வேண்டாம் என்கிறேன். கொச்சை என்றால் திருந்தாத, பிழையான சொல் வடிவம் என்று பொருள். தவறாக நினைக்காதீர்கள்.--செல்வா 00:52, 12 ஆகஸ்ட் 2010 (UTC)


ஆமாம், அந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறேன். ஆனால் சில வேளைகளில் கொச்சை வழக்கும் வட்டார வழக்குக்கு வேறுபாடு காண்பது கடினம். கொச்சை வழக்கு என்றுக் கருத்துக் கூறினால் (எ.கா wader), அவற்றைத் தவிர்ப்பதில் சிக்கல் இல்லை.
ஆனால் தமிழின் பேச்சு வழக்கை கொச்சை வழக்காகக் கருத முடியாது. தமிழுக்கும் ஆங்கிலத்திக்கும் இதில் வேறுபாடு உண்டு. தமிழ் ஒரு இரு வழக்கு மொழி. ஆங்கிலம் அப்படி இல்லை. சொற்கூட்டலில் பிழையாக வரும் எல்லாவற்றையும் பதிவது என் நோக்கம் அல்ல. ஆனால் பேச்சு வழக்கில் வரும் சொல் வடிவங்களைப் பதிவது பேச்சுத் தமிழை ஆவணப் படுத்த உதவும் என்று கருதுகிறேன். --Natkeeran 00:56, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
en:Category:English alternative forms
en:Category:English alternative spellings

--Natkeeran 01:03, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

  • இரு தரப்பு வாதங்களையும் கேட்ட இந்த நீதிமன்றம் :), இருபக்கமுமே நியாயம் இருப்பதாகத் தோன்றுவதால் குழம்பிப்போயிருக்கிறது. (என்னைச் சொல்கிறேன்). இருப்பினும், மேலைநாட்டில் தமிழ் படிக்கும் குழந்தைகளும் மற்றவர்களும் முறையாக நீண்டகாலம் எழுத்துத்தமிழைப் படிக்காதவர்களாகையால், தமிழ்ச்சூழலில் அதைக் கேட்டு வளராதவர்களாகையால், அவர்களுக்கு ஊடகத் தமிழே அதிகம் கிடைக்கப்பெறுவதால், அவர்கள் அதையே படிக்க நேர்வதும், அதில் வரும் உரையாடல் தமிழில் வரும் "எப்பவும்" என்பது போன்ற வார்த்தைகளில் பொருள் தேட முற்படுவதும், அவை அகராதிகளில் கிடைக்கப்பெறாததால் சலிப்படைவதும் (ஞாயிறுகளில் காலை தமிழ்க் கற்றுத் தரும் ஆசிரியன் என்ற முறையிலும், அப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கொண்ட ஒரு தமிழ்ப்பள்ளியின் தற்போதைய முதல்வர் என்ற முறையிலும்) வாரந்தோறும் நான் காணும் ஒன்று. அந்தக் குறை களைய, 'எப்பவும்' என்ற சொல்லைக் கொடுத்து, அதன் செந்தமிழ் "எப்பொழுதும்" என்று திசை திருப்பி "எப்பொழுதும்" பக்கத்தில் பொருளை, மொழிபெயர்ப்பை, விளக்கத்தைக் கொடுத்தல் நலம்பயக்குமல்லவா? பழ.கந்தசாமி 01:11, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
சொற்கள் திரிந்து இருந்தால் அவை கொச்சை வழக்கு (திருந்தாத, திருத்தம் அற்ற). இவை பேசும் பொழுது நிகழ்வது. வட்டார வழக்கு என்பது திருத்தமான சொற்கள் ஆனால் அவை சில வட்டாரங்களில் மட்டுமே நன்கு அறியப்படுவது. எ.கா. வாரியல் என்றால் துடைப்பம். இது திருநெல்வேலியில் வாரியல் என்று வழங்குகின்றது. ஐது என்றால் நெருக்கம் இல்லாமை என்பது திருத்தமான சொல் ஆனால் இது இலங்கையில் வழங்குகின்றது. திருத்தாத கொச்சையான பேச்சு வழக்கையும், வட்டார வழக்கையும் நீங்கள் குழப்புகின்றீர்கள்.cosmonaut என்பதும் astronaut என்பதும் ஒன்றே, ஆனால் ஒன்று உருசியாவிலும் ஒன்று அமெரிக்காவிலும் வழங்குகின்றது. கனடியர்களாகிய நம்மின் தனித்தன்மையான சொல் வழக்கங்கள் 10,000 (பத்தாயிரம்) என்று கணித்துள்ளனர். இவற்றில் பலவும் மிகச் சிறு மக்களிடையே மட்டுமே வழங்கும் சொற்கள் (இவை பேச்சு மொழித் திரிபுகள் அல்ல, சொற்கள். அப்படிப்பட்டனவும் உண்டு, எ.கா -eh என்று முடிவது; ஆனால் skookum என்றால் strong என்பது கொச்சை அல்ல, வட்டார வழக்கு). திருநெல்வேலியில் (தமிழகம்), தடியங்காய் என்றால் பூசனிக்காய். தட்டுவாட்டம் என்றால் திருநெல்வேலியில் சமமான நிலையில் இருப்பது. இவை போன்றவை வட்டார வழக்கு. --செல்வா 01:17, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
பழ கந்தசாமி, நற்கீரன், வழிமாற்று இருப்பது பற்றியோ, விளக்கம் என்னும் பகுதியில் இவற்றைக் குறிப்பிடுவது பற்றியோ நான் கூறவில்லை. அப்படியெல்லாம் இருக்கலாம். ஆனால் தலைச்சொல்லாக ஏற்பு பெற்ற சொல்லாக சிலவற்றை இடுவது தவறான அணுகுமுறையாக இருக்கும் என்பதைத்தான் கூறுகின்றேன்.இல்லீங்க என்பதற்கு சரியீடான இலக்கண வடிவம் இல்லை. -ங்க என்பது மதிப்புத் தந்து பேசும் பொழுது இடும் பின்னொட்டு என்பதைக்குறிக்கலாம். ஆமாங்க, நீங்க(ள்) என்பவையும் அப்படியே. பேச்சு வழக்கை முதன்மைப்படுத்துவதில் உள்ள நுண்ணரசியலை (ஊடகங்கள் முதல், தனிக் குழுக்கள் வரை) நாம் உணரத் தவறினால் அது நம் மொழிக்குப் பெருங் கேடாக அமையும். இன்றளவும் தமிழ் மொழி இப்படி இருப்பதற்குக் காரணம் வழிவழியாய் பல நல்ல தமிழறிஞர்கள் தமிழைக் காத்து வந்தது என்பதைப் பலரும் அறிவதில்லை. இல்லாவிடில் என்றோ சிதறுண்டு சின்னாபின்னமாகியிருக்கும். --செல்வா 01:41, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
செல்வா, நீங்கள் இறுதியாக கூறிய கருத்தோடு உடன் படுகிறேன். திருபுச்சொற்களை தலைச்சொல்லாக இடாமல், வழிமாற்றுத் தரலாம். --Natkeeran 01:54, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
செல்வா, புரிதலுக்காகக் கேட்கிறேன். நீங்களே ஒரு எடுத்துக்காட்டுத் தரவும். ”எப்பவும்” என்று பேச்சுத்தமிழுக்குத் தேடுசாளரத்தில் பொருள் தேடினால், நேராக ”எப்பொழுதும்“ பக்கம் சென்று பொருள் தருமாறு வருதல் நலம் என்பது என் கருத்து. ஆனால், இது பேச்சுவழக்கே, எழுத்துக்கு ஏற்புடையது அல்ல என்பதும் தெளிவாக வேண்டும். பழ.கந்தசாமி 02:23, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
  • நீண்டதோர் உரையாடல் இங்கே நடந்துகொண்டிருப்பதை இப்போதுதான் பார்த்தேன். "எப்பவும்" என்பது கொச்சை என்றே கருதப்பட வேண்டும் என்பது என் கருத்து. குமரி மாவட்டத்தில் அப்பொழுதே, இப்பொழுதே எப்பொழுதே என்பதற்கு அப்பமே, இப்பமே, எப்பமே என்னும் கொச்சை உண்டு. அதெல்லாம் அவ்வயமே, இவ்வயமே, எவ்வயமே என்னும் திருந்திய வழக்குகளின் திரிபுகள்தாம். ஆனால் அவற்றை அகரமுதலியில் இணைப்பது சரியல்ல. --பவுல்-Paul 02:59, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
  • மன்னிக்கவும்! "அவ்வயமமே", "இவ்வயமமே", "எவ்வயமமே" என்றிருக்க வேண்டும். --பவுல்-Paul 03:02, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

பழ. கந்தசாமி, ஆமாம் சில பேச்சு வடிவங்களுக்கு வழிமாற்று தந்து சரியான சொல்லுக்கு அழைத்துச் செல்லலாம். அல்லது பேச்சு வடிவச் சொற்களுக்கான பக்கத்தில் சுருக்கமாக பொருள் தந்து, இது திருந்திய வடிவம் அல்ல; இங்கே பார்க்கவும் என்று குறிப்பிட்டு சரியான சொல் வடிவம் உள்ள பக்கத்துக்கு இணைப்பு தரலாம். எப்பவும், இல்லீங்க, ஆமாங்க, போன்ற வடிவங்களுக்குப் தனிப் பக்கங்கள் உருவாக்கி இணைப்புகள் தரலாம். ஆனால் இன்னிக்கி, இன்னைக்கு, இண்டைக்கு போன்ற சொற்களுக்கு வழி மாற்று மட்டுமே தந்து சரியான சொல் வடிவத்துக்கு இட்டுச் செல்லலாம். அல்லது இது பிழையான பேச்சு வடிவம். பார்க்க என்று கூறி இணைப்பு தரலாம். விளக்கம் என்னும் பகுதியில், பேச்சு வழக்குகள் பற்றி விரிவாகக் கூறலாம். எண்ட என்பது என்றன் என்பதின் திரிபு என்று கூறலாம். கோவையில் உன்றன் என்பதை ஒன்ற என்பார்கள். உன்னுடைய புத்தகம் என்பதை ஒன்ற புத்தகம் என்பார்கள் (அது என்ன ஒன்றறை (1.5) புத்தகம் ? :) என்று கேலி செய்வதுமுண்டு). கோவையில் ஒன்ற என்பதைப் போலவே யாழ்ப்பாணத்தில் என்ற என்பதை எண்ட என்கிறார்கள். அதாவது -ன்ற- ==> -ண்ட என்று மாறும். தமிழ்நாட்டில் சில இடங்களில் -ன்று- ==> -ன்னு- என்று மாறும். கன்றுக்குட்டி ==> கன்னுக்குட்டி, கொன்றுவிட்டான் ==> கொன்னுட்டான் (வி, கி முதலான ஒலிகள் பேச்சு மொழியில் விடுபடும். போகிறேன் என்பது போறேன் என்று மாறுவது போல) நாம் பேச்சு மொழியைப் பதிவு செய்வதில் பல இடர்கள் உள்ளன. அவை மிகப்பல. இடத்துக்கு இடம், குழுவுக்குக் குழு, சூழலுக்குச் சூழல் மாறுவன. ஆங்கிலத்திலும் ஒரு சொல் 5-10 விதமாக ஒலிக்கும். சிலவற்றைப் பதிவு செய்யலாம் (விளக்கம் என்னும் பகுதியில்). பிராமணர்களும் இன்னும் சிலரும் நன்னா இருக்கு என்பார்கள் நன்றாக இருக்கு என்பதன் பேச்சு வடிவம் இது. -ன்றா- ===> -ன்னா- என்று மாறும் விதி. ஆனால் இப்படியே போனால் பல குழப்பங்களில் சிக்கித் திண்டாட வேண்டியிருக்கும். --செல்வா 12:34, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:எப்பொழுதும்&oldid=776953" இலிருந்து மீள்விக்கப்பட்டது