உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Raju Saravanan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வணக்கம்,

என் பெயர் ராஜு சரவணன்.இணைய தேடல் ஒன்றில் விக்கிமீடியா திட்டங்களில் திரு.ரவி அவர்களின் தமிழ் அகராதி தொடர்பான கருத்து ஒன்று கண்ணில் தென்பட்டது. அந்த கருத்தை சார்ந்த சில விளங்கங்களை அவரிடம் கேட்க முற்பட்டபோது அவரின் வழிகாட்டலின் பேரில் திரு.தகவலுழவன் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து திரு.தகவலுழவன் அவர்களிடம் அவ்வசதிகள் பற்றி கேட்டறிந்த நான் மேலும் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிப்பு தொடர்பான தற்போதைய தேவைகளையும் தெரிந்துகொண்டேன்.எனவே என்னால் முடிந்த பங்களிப்பை விக்கிமீடியா திட்டங்களில் இணைத்து, திட்டத்தின் வளர்ச்சியில் பங்குபெற்றுள்ள மற்ற நண்பர்களில் நானும் ஒருவனாக இருக்க விக்கி திட்டங்களில் என்னையும் இணைத்துக்கொண்டேன்.

அடிப்படையில் நான் இரும்பு கட்டுமான பொறியியல் (Structural Steel Engineering) துறையை சேர்ந்தவன். அதனுடன் கணனி நிரலாக்கத்தையும் என் பணி தொடர்பான தேவைக்காக இணைத்துக்கொண்டவன்.தற்போது முழுநேர நிரலாக்கத்தில் மேம்புனராக(Developer) பணியாற்றி வருகிறேன்.பொதுவாக இணையத்தில் தமிழ் வழியில் அறிவியியல் மற்றும் நுட்பியல் தகவல்கள் தரும் தளங்கள் எண்ணிக்கை சொல்லும் அளவிற்கு இல்லை. அப்படியே இருந்தாலும் சரியான தமிழ் சொற்களை சேர்க்காமல் ஆங்கில சொல் மயமாகவே காணப்படுகிறது. எதாவது ஒரு தகவலாவது குறைந்தபட்சம் 80% தமிழ் வடிவில் கிடைக்குமா என்றால் கிடைப்பது அரிதாக உள்ளது. பயன்படுத்தும் அனைத்து அறிவியல் சொற்களும் ஆங்கில மாயமாகவோ அல்லது சரியான தமிழ் சொல்லாக்கம் செய்யாத சொற்களாகவோ உள்ளது.

எண்ணற்ற சிறப்புகளை கொண்ட தமிழ், நான் உயிர் கொண்ட கருவறை முதல், வளரும்போதும், பேச்சின் போதும், கல்வியின் போதும், கருத்தை பகிரும்போதும் கூடவே வந்துகொண்டிருக்கும் தமிழ் இன்று பல மொழிகளுக்கு கீழே இறக்கிவைத்துள்ளதையும், வளமே இல்லாத மொழிகள் எல்லாம் சிம்மாசனத்தில் இருப்பதை பார்க்கும் போதும், வயதான தந்தையரை தூக்கி எறியும் மக்கள் போன்று தமிழர்களே தமிழை உன்னால் ஒருபயனும் இல்லை என்று தமிழை தூக்கி எறிந்துவிட்டு மற்ற மொழிகளை கொண்டாடுவதை கண்டு மனதுக்குள் குமுறும் கூட்டத்தில் ஒருவன் நான்.

மனம் குமுறுவதால் என்ன பயன் நடக்கபோகிறது, எதாவது தமிழுக்கு நம்மால் முடிந்த சேவையை செய்யவேண்டும் என்று எண்ணத்தின் உந்துதல் தான் நான் விக்கிபீடியா திட்டத்தில் இணைய முதன்மை காரணமாக அமைந்தது. தமிழ் சம்மந்தப்பட்ட அறிவியல் கட்டுரைகள், தரமான கலைசொற்கள்,அகராதிகள், நுட்பியல் கட்டுரைகள் போன்றவற்றால் விக்கிபீடியா திட்டத்தை அலங்கரிக்க வேண்டும் என்பது என் ஆசை.இதற்கு தடைகல்லாக இருப்பது தமிழ் கலைசொற்கள். தமிழில் நிறைய கலைசொற்களை நிறைய தமிழ் ஆர்வலர்கள் செய்துவருகின்றனர். இருப்பினும் பயனில்லாத, பேச்சு வழக்கில் கொண்டு வரமுடியாத கலைசொற்களை தவிர்த்து மீதமுள்ள கலைசொற்களின் எண்ணிகையை பார்த்தல் பெருமைப்பட கூடிய அளவுக்கு இல்லை. எனவே முதலில் இருக்கும் தரமான கலைசொற்களை சேகரித்து, இல்லாத கலைசொற்களை உருவாக்குவதே சரியான ஒன்று. அதை நான் இங்கு செய்ய ஆசைபடுகிறேன். அதற்கு இங்கு இணைத்துள்ள மற்ற நண்பர்களுடைய ஆதரவை வேண்டுகிறேன்.

எனக்கு விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான தமிழ் விக்சனரியில் ‎தகவலுழவன் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார் மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்கிறேன்.


என்னுடைய வலைபூ தளம்: http://puthutamilan.blogspot.in/

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Raju_Saravanan&oldid=1251420" இலிருந்து மீள்விக்கப்பட்டது