சகிப்புத்தன்மை
சகிப்புத்தன்மை வாழ்க்கையில் மனிதனுக்கு மிகவும் வேண்டிய ஒரு குணம், சகிப்புத் தன்மை. அது ஒன்றும் மட்டும் இல்லாவிட்டால், நீங்கள் போட்டியிருக்கும், கால் சட்டையின் நிறம் எனக்குப் பிடிக்கவில்லை என்று உங்களை நான் அடிக்க நேரிடும். இதை ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஆனால் சகிப்புத்தன்மை அற்றவர்களின் செயல்பாடுகள் இதனன ஒத்தே இருக்கும்.
சகிப்புத் தன்மை ஏன் அவசியமாகிறது என்பதை முதலில் நாம் பார்ப்போம். நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். அதனாலெ, தான் நமக்குப் பிடிக்காத சில விசயங்களும், நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தே வருகின்றது. அப்படி கூடி வாழும் ஒரு சமுதாயத்தில், உரிமைகளை கட்டிக் காத்துப் பேணுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். அத்தோடு மிகவும் சிரமமான ஒன்றாகும்.
நீங்கள் உலகிலே முக்கியமான காரணத்திற்காக போய்க் கொண்டியிருந்தாலும், தொடர் வண்டி பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் கடைக் கோடியிலிருந்து நேரடியாக முதல் ஆளாக போக முடியாது. மற்றவர்களின் அவசரத்தை விட, அவர்கள் முன்னால் வந்தவர்கள் என்பதை நீங்கள் சகித்துத் தான் ஆகவேண்டும். முன்னால் வந்தவர் 2 மாதம் கழிச்சு இன்பச்சுற்றலாவிற்குப் பயணச்சீட்டு பெறுபவராகவும், நீங்கள் உயிர் காக்கும் மருத்துவராக இருந்தாலும், பொறுத்தே ஆக வேண்டும்.
நீங்கள் இறைஞ்சிக் கேட்டால், அனைவரின் ஒப்புதல் பெற்றியிருந்தால் முன்னால் போகலாம். அப்போதும், உங்கள் உரிமையில் செல்லவில்லை. அடுத்தவரின், உரிமை விட்டுக் கொடுத்ததினால் செல்லுகிறீர்கள். அங்கே ஒருவர் எதிர்த்து குரல் எழுப்பினாலும், உங்கள் சலுகைப் பறிக்கப்படலாம் என்று நீங்கள் அறிய வேண்டும்.நம் உரிமை எவ்வளவு முக்கியமோ, அதே போல் மற்றவர்கள் உரிமையும் மிகவும் முக்கியம். அப்படி உங்கள் சலுகைப் பறிக்கப்பட்டால், சகிப்புத் தன்மையுடன் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
சிறுவர்கள் இருக்கும் வீட்டில், கேலிச் சித்திர அலைவரிசை தொடர்ந்து ஓடும் போது, சகிப்புத் தன்மை சிறிது சிறிதாக குறைவதை நாம் கண்கூடாகப் பார்ப்போம். அதேப் போல் அலுவலகத்தில் பிடிக்காத ஒன்று நிகழ்ந்தால், எவ்வளவு உங்களைத் தூண்டினாலும், நாகரீக எல்லை தாண்ட மாட்டோம். அங்கே சகிப்புத் தன்மை இல்லாவிட்டால், பாதுகாவலரை அழைத்து, தூக்கி வீசப்படுவீர்கள். சட்டமன்றத்தில் நடக்கும் போதும் அதே தான் நடக்கும்.
கருத்துச் சுதந்திரம் என்பது நீங்கள் விரும்பவதைச் சொல்லத் தரும் உரிமை அல்ல. அது தான் சர்வாதிகாரிகள் கடைப்பிடித்தது. உங்களுக்கு ஒப்பில்லாத கருத்து வெளியாகும் போது, அதை வெளிப்படுத்த நீங்கள் அளிக்கும் சுதந்திரம். கருத்துச்சுதந்திரத்தில் ஒன்றிய விசயம் தான் சகிப்புத் தன்மை. உங்களுக்கு அந்த சகிப்புத் தன்மை இல்லாவிடில், எதிர்த்துக் கருத்துச் சொன்னவரை அழிக்கவா, அடிக்கவோ, தாக்கவோ, இழிவாகப் பேசவோ முனைவீர்கள். இங்கே எல்லா சுதந்திரத்தையும் ஆதரிக்கிறேன் என்றுச் சொல்லிவிட்டு, எதிர் கருத்து வரும் போது, அப்பாடி கிடைச்சதுடா வாய்ப்பு என்றுப் போடு கும்முபவர்கள் தான் அதிகம் சகிப்புத் தன்மை அற்றவர்களை நாம் எளிதாக அடையாளம் காணலாம். எதிர் கருத்துக்களைக் கண்டால், கருத்தால் எதிர் கொள்ளாமல், நீ ஓட்டை, நீ அப்படி, நீ இப்படி, (அட திட்டுறதையெல்லாம் போட்டா, என் பதிவுக்கு அப்பறம் சென்சார் தேவை என்றுக் குரல் கேட்காதா ) , நாகரீகமற்றவன் என்றுச் சொல்லிக் கொண்டே மெதுவாக நாகரீக எல்லைக்கு வெளியேச் சென்றுவிடுவார்கள். கபடதாரிகள்/ பாசாங்கு செய்பவர்கள் வழக்கமாக சகிப்புத் தன்மைக் கொண்டவர்களாக வெளியேக் காட்டிக் கொண்டு, சமயம் வரும் போது அதி ஆவேசமாகவே வெளியே வருவார்கள்.
சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திலும், தேவையானது தான், நீங்கள் பார்க்கும் விளையாட்டு நிகழ்ச்சி நேரத்தில் மனைவி தொலைக் காட்சி பார்க்க நினைத்தாலோ/ அல்லது பார்த்தாலோ, அதற்கு இடம் கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் சகிப்புத்தன்மையின் எல்லையே முடிவு செய்யும்.
சரி, சகிச்சிக்கோ, சகிச்சிக்கோ என்றுச் சொல்லிவிட்டு அதற்காக யார் எதைச் செஞ்சாலும், சகிச்சிக்கிட்டு இருக்க வேண்டியது இல்லை. அதற்கு அவ்வப்போது 6வது அறிவு..ஒன்று இருக்கே, பகுத்தறிவு அதை பயன்படுத்த வேண்டும்.