பேச்சு:sell

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பேச்சுத்தமிழில் விய் என்கின்றனரே? இது இலக்கணப்படி ஏற்புடைய formal வினைச்சொல் வடிவம் தானா? இல்லை கொச்சை மொழியா? விற்பனை செய் என்பதை விட விய் சுருக்கமாக இருக்கிறது--ரவி 15:38, 14 நவம்பர் 2006 (UTC)

விய் என்பது சில பகுதிகளில் உள்ள பேச்சு வழக்காக இருக்கக்கூடும். வில் என்பதுதான் சரி. வில் + தல் = விற்றல். Mayooranathan 17:39, 14 நவம்பர் 2006 (UTC)

ஆனால், வில் என்னும் சொல் புழக்கத்தில் இருக்கிறதா? (sell this = இதை வில் - என்றால் மக்களுக்குப் புரியுமா?) இல்லாவிட்டால், இப்பொழுது உள்ளபடி விற்பனை செய் என்ற விளக்கத்தை விட்டுவிடலாம். சுருக்கமான வினைச்சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும். விற்பனை என்ற பெயர்ச்சொல்லை கொண்டு விற்கும் வினையை விளக்க வேண்டுமா? இல்லாவிட்டால், விற்க (செய்க, தருக என்பது போல்) என்று பொருள் தருவோமா? இது சுருக்கமாகவும் இருக்கிறது.--ரவி 18:25, 14 நவம்பர் 2006 (UTC)

தென்மாவட்டங்களில் "இதை எனக்கு வில்லுங்களேன்" என்பது போன்ற பயன்பாட்டை பேச்சு வழக்கில் கேட்டிருக்கிறேன்! ஆனால், இது எந்த அளவு புழக்கத்தில் உள்ளது எனத் தெரியவில்லை. ஆவணப் பதிவு அலுவலகங்களில் கிடைக்கும் வில்லங்கம் இதனுடன் தொடர்புடையதா? -- Sundar 08:22, 15 நவம்பர் 2006 (UTC)

வில் என்பது யாழ்ப்பாணத்திலும் பயன்படும் ஒரு சொல்தான். நல்ல விலை கிடைத்தால் வில் என்பது போன்ற பயன்பாடுகள் உண்டு. மதராஸ் பலகலைக்கழக அகராதியில் வில்-தல் என்றுதான் வில்லுக்கான வினைச்சொல்லைப் பட்டியலிட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் வில்லங்கம் என்றால் பிரச்சினை என்று ஒரு பொருள் உண்டு. அத்துடன், வில்லங்கத்துக்கு என்னோடை கதைக்கிறான், வில்லங்கத்துக்கு அவனோடை சண்டை பிடிக்கிறான் போன்ற பயன்பாடுகளைப் பரவலாகக் காணமுடியும். இங்கே வில்லங்கம் என்பது தேவையில்லாமல், அல்லது தானே முயன்று போன்ற பொருளில் வருவதாகத் தெரிகிறது. அழுகை வராமல் அழுதல், சிரிப்பு வராமல் சிரித்தல் போன்றவற்றையும், வில்லங்கத்துக்கு அழுதல், வில்லங்கத்துக்குச் சிரித்தல் எனக் குறிப்பிடுவதுண்டு. தமிழகத்தில் வில்லங்கம் என்பதற்கு வேறு பொருள் உண்டா? Mayooranathan 16:44, 16 நவம்பர் 2006 (UTC)

தமிழ்நாட்டில் வில்லங்கம் என்ற சொல் பொதுவாக நீங்கள் குறிப்பிட்டபடி தான் பயன்படுத்தப் படுகிறது. கிட்டத்தட்ட சிக்கல் என்ற பொருள் தரும் வகையில். ஆனால், குறிப்பாக நிலம் வீடு வாங்கும்போது இதற்கு ஒரு சிறப்புப் பொருள் உண்டு. அதாவது, ஆவணப் பதிவு அலுவலகங்களில் நாம் வாங்கவிருக்கும் சொத்துக்களின் முந்தைய சொந்தக்காரர்கள் எவர், அவற்றின் தற்போதைய சொந்தக்காரருக்கு முழு உரிமை இருக்கிறதா அன்று தெரிவிக்கும் ஒரு ஆவணம் வில்லங்கம் எனப்படும். -- Sundar 06:31, 17 நவம்பர் 2006 (UTC)
விளக்கத்துக்கு நன்றி சுந்தர். யாழ்ப்பாணத்தில், வில்லங்கம் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டிய பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆவணத்தை நாங்கள் தாயுறுதி (தாய் + உறுதி) என்போம். Mayooranathan 07:56, 17 நவம்பர் 2006 (UTC)
தாயுறுதி அருமையான தமிழ்ப் பயன்பாடு. -- Sundar 08:37, 17 நவம்பர் 2006 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:sell&oldid=27750" இருந்து மீள்விக்கப்பட்டது