பேச்சு:ஈர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இரண்டு என்று பொருள்படும் இரு என்னும் சொல் உயிரெழுத்துடன் தொடங்கும் சொல்லுக்கு முன் ஈர் என்று மாறும். எடுத்துக்காட்டாக இரண்டு இழை என்பதை ஈரிழை என்போம். துணி வாங்கும் பொழுது ஈரிழைத்துண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆடையில் இரட்டை நூலால் பின்னிய துணியால் செய்திருப்பதை ஈரிழை என்பார்கள். இரண்டு ஆண்டு என்பதை ஈராண்டு என்போம் அல்லவா, இதனை ஈராட்டை என்றும் சொல்வர். அதே போல ஈர் என்பது பிள என்னும் பொருள் படும் வினை (வினைச்சொல்). ஈர்தல் = (இரண்டாய்ப்) கூறிடுதல், பிளத்தல், பிரித்தல் என்று பொருள் படும். நீளமான தென்னை ஓலையின் நடுவே இருக்கும் நரம்பைப் (கெட்டியாக உள்ள பகுதி) பிரித்து எடுப்பதற்கு ஈர்தல் என்பர். இந்த நரம்புகளை ஈர்க்கு என்பர். ஓலையீர்க்கு என்றும் கூறுவர். இந்த நரம்புகளைத் ஒன்றாகத் திரட்டி விளக்குமாறு அல்லது துடைப்பம் செய்வர். திருநெல்வேலியில் இந்த விளக்குமாறு, துடைப்பம், பெருக்குமாறு என்பதை வாரியல் என்பர் (வார்தல் என்றால் சீராக கூட்டுதல், குப்பைகளைக் கூட்டி, திரட்டி எடுப்பதற்குப் பயன்படுவது). ஈர் (பிள, அறு) என்பதன் அடிப்படையாக ஈர்வாள் (மரம் அறுக்கும் வாள், அரம்), ஈர்வலி என்பது தென்னை ஓலையில் இருந்து நரம்பை பிரித்தெடுக்கும் (உருவுங்) கருவி. ஈர் என்பதற்கு இன்னும் பல பொருள்கள் உள்ளன. ஈரம், பசுமை, இறகு, கரும்பு, நுண்மை, இனிமை, நெய்ப்பு,, குளிர்ச்சி, பேன்முட்டை என்பன பெரும்பாலானவை. இப்பொருள்கள் ஒவ்வொன்றும் விரிவு பெற்று பிற சொற்களைத் தரும். --செல்வா 03:49, 6 மார்ச் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஈர்&oldid=633247" இருந்து மீள்விக்கப்பட்டது