சைவ உணவு என்பது மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகிய தாவரங்கள் தரும் காய், பழம், இலை அதாவது கீரை, கிழங்கு, மலர், கொட்டை, விதை, தானியங்கள், சாறு ஆகியனவும் மற்றும் இவைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுமாகும்...ஆடு, பசுமாடு, எருமை போன்ற விலங்குகள் தரும் பால் மற்றும் பால் பொருட்கள் தவிர, மற்றெந்த வகையிலும் விலங்குகள், பறவைகள் மற்றும் இதர உயிரினங்களோடு தொடர்பில்லாதது சைவ உணவு...
'புலால் மறுத்தல்' இந்துச்சமய --(சைவம் & வைணவம்)--உயர்நிலைக் கோட்பாடுகளிலொன்று எனப்படுவதால் புலால்/இறைச்சி/மாமிசமில்லாத உணவு சைவ உணவு என்றே சொல்லப்பட்டது...புலாலுண்ணும் இந்து மக்களும், அமாவாசை, இதர நோன்பு நாட்களில் மாமிச உணவு உண்ணாமலிருப்பர்...கேட்டால் இன்று நாங்கள் சைவம் என்பர்!...இறைச்சியுணவை குல வழக்கமாகக் கொள்ளாத, பிராமணர்களைப்போன்ற, மற்றச் சாதியினர், தங்கள் சாதிப் பெயரின் முன் சைவ என்னும் சொல்லை இணைப்பதைக் காணலாம்...எடுத்துக்காட்டாக, சைவ பிள்ளைமார், சைவ முதலியார், சைவ வேளாளர் முதலியோர்...தமிழகத்தில் சைவம் என்பதைப்போலவே வட இந்தியாவில், இந்துக்களின் புனித சேத்திரப் பகுதிகளிலுள்ள, சைவ அதாவது மாமிசமில்லாத உணவை வழங்கும் உணவகங்கள் வைஷ்ணவ் என தம்மைக் குறிப்பிட்டுக்கொள்ளுகின்றன...