விக்சனரி:புதிய சொற்களின் வளம்
றஓமரா
உலக மொழிகள் வரிசையில்
[தொகு]முதன்மையான சொற்களின் மொழி பெயர்ப்பு
[தொகு]ஒவ்வொரு மொழியிலும் ஏறத்தாழ 400-600 சொற்கள் அடிப்படை சொற்கள் எனக் கருதப்படுகின்றன. இவற்றை 1000 ஆகவும் நாம் கொள்ளலாம்.
- உடல் உறுப்புகளின் பெயர்கள் (கை, கால், தலை..),
- நெருங்கிய உறவுகள் (அம்மா, அப்பா, அண்ணன்..),
- அன்றாடம் பயன்படும் பெயர்ச்சொற்கள் (வீடு, மரம்..விலங்குகள், பறவைகள், பூச்சிகள்) *வினைச்சொற்கள் (வா, போ, தா...),
- உரிச்சொற்கள் (நல்ல, கெட்ட, உயரமான,..)
போன்றவை இவை. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய திராவிட மொழிகளில் முதலிலும், இந்தி, வங்காளி, மராட்டி ஆகிய மற்ற சில இந்திய மொழிகளில் அடுத்ததாகவும் முதன்மையான ஓராயிரம் சொற்களுக்குத் தமிழில் பொருள் தருமாறு ஒரு திட்டம் வகுத்து சொற்களுக்கான பக்கங்கள் உருவாக்கலாம். இதனால், அடிபப்டையான சொற்கள் இந்திய மொழிகளில் எத்தனை ஒற்றுமை வேற்றுமையுடன் உள்ளது என்று அறிவது மட்டுமல்லாமல், அவை நன்றாகப் பயன்படும் சொற்களாகவும் இருக்கும். பின்னர் விரிவாக எழுதுகின்றேன். ஒரு பத்து இந்திய மொழிகளில் இப்படி ஓராயிரம் சொற்களுக்கு பக்கங்கள் உருவாக்கினால், பயனுடைய 10,0000 பக்கங்களை நாம் உருவாக்கியதாகும். அடுத்த கட்டமாக இதே சொற்களுக்கு ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், எசுப்பானியம், போர்த்துகீசியம், சீனம், சப்பானியம் ([[நிப்பானியம்), அரபி ஆகிய மொழிகளுக்கான பக்கங்களையும் உருவாக்கலாம். பொருளும் விளக்கமும் தமிழில் இருக்க வேண்டும். ஒலிப்பும் (பலுக்கலும்) தமிழ் எழுத்துகளில் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தை அழகான வடிவமைப்புடன் ஆக்குதலும் நல்லது.--செல்வா 16:56, 4 மே 2010 (UTC)
- இத்திட்டத்தை நாம் வளர்த்து எடுத்தால், விக்சனரி தனித்தன்மை வாய்ந்ததாகவும் பயன் மிக்க ஒரு இணைய பன்மொழி அகரமுதலியாகவும் வளர்ந்தெழும். தென்னிந்திய மொழிகள் + 3 வட இந்திய மொழிகள் (இந்தி, மராத்தி, வங்காளி), ஆகியவற்றை முதலில் எடுத்துக்கொள்ளலாம். --செல்வா 14:56, 30 மே 2010 (UTC)
தமிழ் விக்சனரியை பின்னால் இருந்து துரத்திக்கொண்டு வந்த இடாய்ச்சு மொழி விக்கி அகராதியைத் தாண்டிக்கொண்டு கொரிய மொழி விக்கி அகராதி வந்துவிட்டது. நாம் இன்னும் விரைவாய் முன்னேற வேண்டும். தமிழ் இணைய பல்கலைச் சொற்களைச் சேர்த்தால் முன்னேறுவோம் என்று இல்லாமல் இன்னும் சொற்களைத் தொகுக்க வேண்டும். ஒரு கருத்துதான். விழைவுதான். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பல சொற்கள் இன்னும் திருத்தமாக பொருள் தரவேண்டிய நிலையில் உள்ளன. தென்னிந்திய மொழிச்சொற்களை எளிதாக தொகுக்கலாம். --செல்வா 19:04, 12 ஜூலை 2010 (UTC)
முதன்மையான சொற்களின் மொழி பெயர்ப்பு என்ற மேலுள்ள தலைப்பில், நீங்கள் இதுபற்றி எடுத்துரைத்தீர்கள். எனினும், அத்தகையச் சொற்கோவையை உருவாக்கி தந்தால், அவற்றினை 5 ,6 இந்தி மொழிகளில் நான் நண்பர்களின் உதவியுடன் மொழிமாற்றம் செய்து முடிப்பேன். எனவே, அதனைச் செய்து முடிக்க வேண்டுகிறேன்.--த*உழவன் 06:20, 17 ஜூலை 2010 (UTC)
- வணக்கம். விக்சனரிக்கு என்று தனி பங்களிப்பாளர் வட்டம் உருவாகி உழைப்பைத் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொற்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலக விக்சனரி வரிசை என்பது மாறிக் கொண்டே இருக்கும். எனவே, அதை இலக்கு வைத்து மட்டுமே செயல்படுவது சரியாக இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, நண்பர்கள் என்பதற்குத் தனிபக்கம் உருவாக்குவது பக்க எண்ணிக்கையைக் கூட்டும். ஆனால், ஒரு பயனராக எனக்கு உதவாது. நண்பன், நண்பர், நண்பர்கள், நண்பனின், நண்பனால், நண்பனோடு என்று எப்படித் தேடினாலும் அவை அனைத்தும் நண்பன் அல்லது நண்பர் என்ற பக்கத்துக்கு வழிமாற்றப்படுவதே சிறப்பாக இருக்கும். மூலச் சொல்லுக்கு மட்டுமே முதன்மைப் பக்கம் இருக்க வேண்டும். அங்கு அச்சொல்லின் அனைத்து வகைப்பயன்பாடுகளும் ஒரு விரிவாகக் குறிப்பிடவேண்டும். இது போலவே நமது அனைத்துச் செயல்பாடுகளும் பயன் கருதி இருக்க வேண்டுமே தவிர தரவுகளைக் குறி வைத்து இருக்கக்கூடாது--ரவி 18:23, 17 ஜூலை 2010 (UTC)
- பயன்பாட்டை அடிப்படையாக க் கொண்டே, எண்ணிக்கையைக் கூட்டுவேன்.த*உழவன் 00:52, 18 ஜூலை 2010 (UTC)
அண்ணே! கொரியன் முன்னே!
[தொகு]ஒரு தகவலுக்காக, எண்ணிக்கையை பொறுத்த அளவில், கொரிய மொழி இன்று தமிழைத் தாண்டிச் சென்றுள்ளது. பழ.கந்தசாமி 01:14, 27 ஜூலை 2010 (UTC)
- நேற்றே பார்த்தேன், நம்மைத் தாண்டிவிட்டார்கள். மிக விரைவாய் வந்து இடாய்ச்சு மொழியைத் தாண்டி நம்மையும் எட்டி விட்டார்கள். த.இ.ப சொற்களைச் சேர்த்தபின்பு கொஞ்சம் முந்துவோம் (5-6 இடங்கள்?).--செல்வா 01:36, 27 ஜூலை 2010 (UTC)
சில கலைச்சொற்கள்
[தொகு]இவை எழுத்தாளர் ஜெயமோகனின் வலைதளத்தில் இருந்தது. சுட்டி இவற்றையும் கருத்தில் கொள்ளலாம்.
- கண்டேன். கருத்தாழ்வோம். இங்கு கொண்டு வர நீங்களும் உதவுவீர்களா? நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டுகிறேன். சுட்டியமைக்கு நன்றி த*உழவன் 00:12, 23 மே 2010 (UTC)
நிகண்டுகள் எங்கே?
[தொகு]- மற்ற மொழிகளை விட, தமிழின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுபவை நிகண்டுகள். அவைகளைக் குறித்த சொற்தொகுதிகள் நம் விக்சனரியில் இல்லை. கண்ணில் பட்டதை, பகுப்பு:நிகண்டுகளின் சொற்கள் என்பதில் தொகுத்துள்ளேன். இருப்பினும் முறைப்படி அவற்றினைத் தொகுக்கப்பட வேண்டும்.
- தமிழறிஞர் அதற்கான நடவடிக்கை எடுப்பரா? அங்ஙனம் எடுப்பின், அவர்களோடு இணைந்து பணியாற்ற, இந்த எழுத்தன் ஆவலாக உள்ளான். நமது தொன்மைகளைப் புரட்டினாலே, தமிழ் மற்ற மொழிகளுடன் முன்னணியில் இருக்கும் என்ற பேராவலில் இதனை முன்வைக்கிறேன் { த*உழவன் 05:28, 31 மே 2010 (UTC) }
விக்சனரி தலைச்சொற்களைத் தரப்படுத்தல் எப்படி?
[தொகு]இது பெரும் சிக்கல் வாய்ந்த விடயம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, ஆழமான, விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னரே ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். தற்போது என் உள்ளத்தில் எழுகின்ற கருத்துகளைப் பகிர்கிறேன். பழ. கந்தசாமி, த*உழவன், செல்வா, உங்கள் கருத்துக்களை ஊன்றிச் சிந்தித்தேன். த*உழவன் மேலே கூறுவது போல, விக்சனரி பதிகையின் முதல் கட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் தேவை எழுந்துள்ளது என்றுதான் நானும் நினைக்கின்றேன்.
1) விக்சனரியில் மூன்று விதமான தலைச்சொற்கள் உள்ளன. முதல்முதலில் தமிழ்ச் சொற்கள். இரண்டாவது ஆங்கிலச் சொற்கள். மூன்றாவது எஞ்சிய மொழிச் சொற்கள் (இந்தி, மலையாளம் போன்ற இந்திய மொழிச் சொற்கள்; பிரான்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம் போன்ற ஐரோப்பிய மொழிச் சொற்கள்; சுவாகிலி போன்ற ஆப்பிரிக்க மொழிச் சொற்கள்....முதலியன).
2) இந்த மூன்று வகையான தலைச்சொற்களுக்கும் சிறிது வேறுபட்ட முறையில் ஒழுங்குகள் வகுக்க வேண்டும் என்பது முதல் கரிசனை.
3) முதலில் தமிழ்த் தலைச்சொற்களை எடுத்துக்கொள்வோம். தற்சமயம் இப்பதிகைகள் பெரும்பாலும் பெயர்ச்சொற்களாகவும் வினைச்சொற்களாகவும் உள்ளன. உரிச்சொற்கள் சில இருந்தாலும் அவை பெயர்ச்சொற்களாக ஆங்காங்கே தரப்பட்டுள்ளன (எ.டு.: நல்ல; கெட்ட; குறுகிய; சிறிய போன்றவை). விரிந்த, அகன்ற, தாண்டிய, மீண்ட, செறிந்த, குறைந்த, கூடிய போன்ற பெயர் உரிச்சொற்களும், அவற்றிற்கு இணையான விரிய, விரிந்து; அகல, அகன்று; தாண்ட, தாண்டி; செறிய, செறிந்து; குறைய, குறைந்து; கூட, கூடி போன்ற வினை உரிச்சொற்களும் விக்சனரியில் தலைச்சொற்களாகத் தரப்படவில்லை. சென்னைத் தமிழ் அகரமுதலியில் வளர்தல், வளர்த்தல் தலைச்சொற்களாக உள்ளன; ஆனால் "வளர்" தலைச்சொல்லாக இல்லை. விக்சனரியிலோ நேர்மாறாக, வளர் (grow, raise - தன்வினை, பிறவினை) உள்ளது, ஆனால் வளர்தல், வளர்த்தல் இல்லை.
4) மேலே நான் கூறுவதைப் புரிந்துகொள்ள "விரி" என்னும் தலைச்சொல்லை எடுத்துக்கொள்வோம். அது விக்சனரியில் உள்ளது (முழுமையாக இல்லை); ஆனால், விரிதல், விரித்தல், விரிவு, விரிப்பு, விரிக்கை போன்றவை தலைச்சொற்களாகவோ துணைச்சொற்களாகவோ விக்சனரியில் இல்லை. விரிந்த, விரிய, விரிந்து ஆகிய பெயர்/வினை உரிச்சொற்களும் இல்லை.
5) எனவே, முதல் கேள்வி வினைச்சொல் பற்றியது: எந்தத் தமிழ்ச் சொற்களைத் தலைச்சொற்களாக இடுகை செய்வது? (தா, கொடு, வா, போ, குடி, அமர், நில், செல், கொள், எழு போன்ற ஏவல் வடிவ வினைச் சொற்கள் மட்டுமா, அல்லது தருதல், கொடுத்தல், வருதல், போதல், குடித்தல், அமர்தல், செல்லல் (செல்லுதல்), கொள்ளல் (கொள்ளுதல்), எழுதல் போன்ற "அல்" ஈறு பெற்ற வினைச்சொல் வடிவத்தையும் - infinitive - (சென்னை அகரமுதலி போல) தந்தால் நல்லதா?
6) அதோடு தொடர்புடைய கேள்வி: மேலே குறிப்பிட்ட வினைச்சொற்களிலிருந்து பிறக்கின்ற உரிச்சொற்கள் பற்றியது. தா-விலிருந்து தந்த, தர, தந்து; கொடு-விலிருந்து கொடுத்த, கொடுக்க, கொடுத்து; மேலும் - வந்த, வர, வந்து; போன, போக, போய்; குடித்த, குடிக்க, குடித்து; அமர்ந்த, அமர, அமர்ந்து; நின்ற, நிற்க, நின்று; சென்ற, செல்ல, சென்று; கொண்ட, கொள்ள, கொண்டு; எழுந்த, எழ, எழுந்து - என்ற விதத்தில் பெயர் உரிச்சொற்களையும் வினை உரிச்சொற்களையும் தலைச்சொற்களாகத் தர வேண்டுமா?
7) என் கருத்து: வினைச்சொல்லின் ஏவல் வடிவத்தையும் "அல்" ஈறு வடிவத்தையும் தலைச்சொற்களாக இடலாம். அவற்றை இடும்போது, "அல்" ஈறு கொண்ட சொற்களுக்கு அருகில், அடைப்புக் குறிகளுக்குள் வினை உரிச்சொல்லையும் பெயர் உரிச்சொல்லையும் தரலாம். எ.டு.: "தருதல்" என்னும் சொல்லுக்குக் "கொடுத்தல்", "அளித்தல்", "வழங்குதல்", "பொழிதல்" போன்ற பொருள்களைத் தந்துவிட்டு, (தா - ஏவல் வினை; தந்த - பெயர் உரிச்சொல்; தர, தந்து - வினை உரிச்சொல்) என்று இடலாம். இதற்கு ஒரு வார்ப்புரு ஆக்க வேண்டும். அது இவ்வாறு அமையலாம்: தா வார்ப்புரு:ஏ.வி; தந்த வார்ப்புரு:பெ.உ.; தர, தந்து வார்ப்புரு:வி.உ.. அதுபோலவே "தா" என்னும் சொல்லுக்கு, "கொடு", "அளி", "வழங்கு", "பொழி" போன்ற பொருள்களைத் தந்துவிட்டு, முதலில் வார்ப்புரு:ஏவல் வினை வார்ப்புரு:ஏ.வி. என்று அடையாளம் காட்ட வேண்டும். "தருதல்" என்று அடைப்புக் குறிகளுக்குள் இடலாம். இங்கே தந்த, தந்து என்னும் சொற்களைக் கொடுக்க வேண்டியதில்லை. அவற்றைத் "தருதல்" என்னும் இடுகையிலிருந்து கண்டுகொள்ளலாம். இங்கேயும் ஒரு வார்ப்புரு ஆக்க வேண்டும்.
8) அடுத்த கேள்வி: பெயர்ச்சொல் பற்றியது. இங்கே ஒருபொருள் மட்டுமே தருகின்ற சொற்களை முதலில் எடுத்துக்கொள்வோம். "இலை" என்னும் சொல்லுக்குப் பொருள் தர வேண்டும். அது பெயர்ச்சொல் என்று குறிப்பிட வேண்டும். (இலக்கியப் பயன்பாட்டில் "இலை" என்பது "இல்லை" எனவும் பொருள் தரக் கூடும். அதை இங்கே கருதாது விடுவோம்!). வழக்கம் போல ஆங்கிலப் பெயர்ப்பு வரும். ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கும்போது (தமிழில் பெரும்பான்மையான சொற்கள் இவ்வகைத்தே), அவற்றை ஒழுங்குற அமைப்பது எளிதன்று. எடுத்துக்காட்டாக, "சொல்" என்னும் பெயர்ச்சொல்லுக்கு மட்டும் க்ரியா அகராதி 5 பொருள்களும் விளக்கங்களும் தருகிறது ("சொல்" என்னும் வினைச்சொல்லுக்கு 8 பொருள்களும் விளக்கங்களும் அங்கே உள்ளன!). வெவ்வேறான பொருள்கள் இருக்கும்போது, ஒவ்வொரு பொருளுக்கும் அடுத்த வரியிலேயே ஆங்கிலப் பெயர்ப்பையும் கொடுத்துவிட்டால் குழப்பம் இராது. எடுத்துக்காட்டாக, "அடி" என்னும் பெயர்ச்சொல்லுக்குக் க்ரியா stroke, lash, beating, blow; foot, step, twelve inch measurement, bottom, area immediately surrounding a particular object, foot-print; metrical line; particle used for addressing a woman என்று குறைந்தது நான்கு வகையான பொருள் தொகுதிகளைத் தருகிறது. ஒவ்வொரு பொருளையும் தமிழில் கொடுத்துவிட்டு, உடனேயே ஆங்கிலத்தையும் கொடுத்தால் எப்படி? குழப்பம் குறையும்!!
9) இப்பதிகை மிக நீண்டுவிட்டதால் இங்கே நிறுத்துகிறேன். கருத்துப் பகிர்வு தொடரட்டும்! --பவுல்-Paul 03:23, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
பவுலின் கருத்துகள் பற்றி செல்வாவின் கருத்துகள்
[தொகு]- மிக அருமையான, தேவையான கருத்துப் பகிர்வு, பவுல். தலைச்சொல், வினைச்சொல், மொழிபெயர்பு ஆகிய மூன்று கருத்துகள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பற்றிய கருத்துகளைப் பகிர்கிறேன்.
- விக்சனரியில் வந்த, தந்த, வந்து,, தந்து போன்ற சொற்களும் தலைச்சொற்களாக இருக்கலாம், ஆனால் அவற்றின் பொருளைத் தந்த பின்னர், அச்சொற்களுக்கு அடிப்படையான வா, தா ஆகிய வினைச்சொற்களின் பக்கங்களுக்கு இணைப்புத்தந்து பார்க்கச்சொல்ல வேண்டும்.
- தமிழில் ஏவல் வினை வடிவம்தான் (imperative form) ஆங்கிலத்தில் infinitive என்பதற்கு ஈடானது. செல் வினை (both imperative and infintive), செல்லல் என்பது வினை அல்ல, பெயர்ச்சொல் வடிவங்களில் ஒன்று. வினையைக் குறிக்கும் பெயர்ச்சொல் (verbal noun); ஆங்கிலத்தில் gerund என்று சொல்வதல்ல எனினும் அதற்கு ஒரு வாறு தொடர்புடையது. Smoking is prohibited here என்பதில் Smoking என்னும் சொல் பெயர்ச்சொல் போல் பயன்படுகின்றது. ஆனால் ஆங்கிலத்தில் It is a boring lecture என்று சொல்லும்பொழுது, அதில் பெயரடையாக (பெயர் உரிச்சொல்லலாக)ப் பயன்படுகின்றது. நாம் தமிழில் வினை இல்லாமலே சொற்றொடர்கள் அமைக்க இயலும் (உருசிய மொழியிலும் உண்டு): எ.கா இது புத்தகம், நான் ஒரு மாந்தன். இதே போல இவ்விடத்தில் புகைபிடித்தல் கூடாது என்பதில் புகை பிடித்தல் என்பது பெயர்ச்சொல். வேட்டையாடல் அந்நாட்டில் ஒரு பொழுதுபோக்கு என்பதிலும் வேட்டையாடல் என்பது பெயர்ச்சொல் (இவற்றில் எல்லாம் வினையே இல்லை). தன்வினை, பிறவினை என்னும் வினைவடிவங்களையும் தெளிவாகாத் தர வேண்டும். படி, படிப்பி, கல், கற்பி, எழு, எழுப்பு (படித்தல், படிப்பித்தல், கற்றல், கற்பித்தல், எழுதல், எழுப்பித்தல் என்னும் பெயர்ச்சொல் வடிவங்களையும் தருதல் வேண்டும்).
- ஆகவே பல்வேறு சொல் வடிவங்களுக்குப் பக்கங்கள் இருக்கலாம், ஆனால் அவற்றை அக்கறையுடன் இணைத்து முதற்சொற்களாகக் கருதப்படும் சொல் வடிவங்களுக்கு உள்ளிணைப்பு தந்து பார்க்க உந்துதல் தர வேண்டும்.
- ஒரு தமிழ்ச்சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தாலும், மொழிபெயர்ப்புகள் தனியே கடைசியில் வருவதுதான் முறை என்பது என் கருத்து. ஏன் ஆங்கிலச்சொல்லுக்கு மட்டும் உடனே பக்கத்திலேயே தருதல் வேண்டும் என்னும் கேள்வி எழுகின்றது (இப்படியான சாய்வுகள் வேண்டாம்). மேலும் பல தமிழ்ச்சொற்களுக்கு ஒரே ஆங்கிலச்சொல்லோ (பிறமொழிச்சொல்லோ) சரியான மொழிபெயர்ப்பாக இல்லமலும் இருக்கலாம், ஆகவே, பலசொற்களைத் தர வேண்டியிருக்கலாம். அப்பொழுது பார்ப்பதற்கு ஒழுங்கற்ற விதமாகத் தெரியும். இதற்கு ஒரு தீர்வாக, சொற்பொருளுக்கு அருகே மீசுட்டுள்ள மொழிபெயர்ப்புகள் என்று ஒரு சுட்டியைத் தந்து தேவையான இடத்துக்கு அழைத்துச் சென்று (அதே பக்கத்தில்) அங்கே அச்சொல்லுக்கான பிறமொழிச் சொற்கள் அனைத்தையும் (ஆங்கில உட்பட) தரலாம்.
--செல்வா 12:03, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
செல்வா + பவுல் - பகிர்தல் குறித்து கருத்துகள்
[தொகு]- செல்வா, தங்கள் இடுகைக்கு நன்றி!
- உங்களுக்கும் நன்றி. --செல்வா 00:43, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
1) தாங்கள் கூறியது: "விக்சனரியில் வந்த, தந்த, வந்து,, தந்து போன்ற சொற்களும் தலைச்சொற்களாக இருக்கலாம், ஆனால் அவற்றின் பொருளைத் தந்த பின்னர், அச்சொற்களுக்கு அடிப்படையான வா, தா ஆகிய வினைச்சொற்களின் பக்கங்களுக்கு இணைப்புத்தந்து பார்க்கச்சொல்ல வேண்டும்."
- என் கருத்து:
வந்த, தந்த போன்ற வடிவங்களையெல்லாம் விக்சனரியில் இடும்போது மிகவும் நீண்டுபோகாதா? பிற தமிழ் அகரமுதலிகள் அவ்வாறு செய்வதில்லையே.-பவுல்
- வா, தா போன்ற வேர்ச்சொல் பக்கங்களில் வினையெச்சம், காலம் எனப்பலவற்றையும் இலக்கணக்குறிப்பாகத் தரலாம். வந்த, தந்த என்பனவற்றை தனித்தலைப்புப் பக்கங்களில் வா, தா, என்பனவற்றின் ஒரு இலக்கண வேறுபாடு (வினையெச்சம், பெயரெச்ச்சம்) என்பது போலக் குறித்து, ஒரு பயன்பாட்டு வாக்கியத்தையும் தரலாம். பயன்பாட்டு வாக்கியம் அவசியம். இல்லையென்றால் பொருள் விளங்காமல் போகலாம். விக்சனரி நீளமாகிறது என்பதை நாம் பொருட்டாக எடுக்கவேண்டியதில்லை. பழ.கந்தசாமி 23:13, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
- என் கருத்தும் பழ. கந்தசாமியினுடையதே. ஆனால் வேண்டாம் எனினும் எனக்கு உடன்பாடே. எப்படியாயினும், வந்த, வந்து போன்ற வடிவங்களுக்கு இலக்கணக் குறிப்பும், எடுத்துக்காட்டுச் சொற்றொடரும் தருவது தேவை என நினைக்கின்றேன்.--செல்வா 00:43, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
2) தாங்கள் கூறியது: "தமிழில் ஏவல் வினை வடிவம்தான் (imperative form) ஆங்கிலத்தில் infinitive என்பதற்கு ஈடானது. செல் வினை (both imperative and infintive), செல்லல் என்பது வினை அல்ல, பெயர்ச்சொல் வடிவங்களில் ஒன்று. வினையைக் குறிக்கும் பெயர்ச்சொல் (verbal noun); ஆங்கிலத்தில் gerund என்று சொல்வதல்ல எனினும் அதற்கு ஒரு வாறு தொடர்புடையது. Smoking is prohibited here என்பதில் Smoking என்னும் சொல் பெயர்ச்சொல் போல் பயன்படுகின்றது. ஆனால் ஆங்கிலத்தில் It is a boring lecture என்று சொல்லும்பொழுது, அதில் பெயரடையாக (பெயர் உரிச்சொல்லலாக)ப் பயன்படுகின்றது. நாம் தமிழில் வினை இல்லாமலே சொற்றொடர்கள் அமைக்க இயலும் (உருசிய மொழியிலும் உண்டு): எ.கா இது புத்தகம், நான் ஒரு மாந்தன். இதே போல இவ்விடத்தில் புகைபிடித்தல் கூடாது என்பதில் புகை பிடித்தல் என்பது பெயர்ச்சொல். வேட்டையாடல் அந்நாட்டில் ஒரு பொழுதுபோக்கு என்பதிலும் வேட்டையாடல் என்பது பெயர்ச்சொல் (இவற்றில் எல்லாம் வினையே இல்லை). தன்வினை, பிறவினை என்னும் வினைவடிவங்களையும் தெளிவாகாத் தர வேண்டும். படி, படிப்பி, கல், கற்பி, எழு, எழுப்பு (படித்தல், படிப்பித்தல், கற்றல், கற்பித்தல், எழுதல், எழுப்பித்தல் என்னும் பெயர்ச்சொல் வடிவங்களையும் தருதல் வேண்டும்)." -செல்வா
- என் கருத்து:
மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறீர்கள். தமிழ் இலக்கணத்தை நேருக்கு நேர் ஆங்கில முறையிலோ, இலத்தீன் முறையிலோ ஒப்பிட்டு இணைப்படுத்துவது முறையல்ல என்னும் கருத்தைத் தெளிவாக்கிவிட்டீர்கள். "வா" என்னும் வினையடியிலிருந்து "வருதல்" "வரல்" என்னும் வடிவங்களும்; "வருகை", "வரவு", "வரத்து", "வருமானம்", "வருவாய்", "வரும்படி", "வருமதி" என்னும் வடிவங்களும் பெறப்படலாம். இவற்றுள் இரண்டாம் வடிவச் சொற்களைத் தெளிவாகப் "பெயர்ச்சொற்கள்" என்று இன்றைய வழக்கில் அழைக்கலாம். ஆனால் முதல் வகை தெளிவாக "தொழில் பெயர்" வகை சார்ந்தவை. இருவகைச் சொற்களுக்கும் அடிப்படையாக இருப்பது "வினை" அல்லது "தொழில்"தான். எனவே "infinitive" (to go, to come, etc.) ஒருவித்தில் வினையாகவும் பெயராகவும் உள்ளது. இதோ ஒரு வரையறை: in·fin·i·tive - A verb form that functions as a substantive while retaining certain verbal characteristics, such as modification by adverbs, and that in English may be preceded by to, as in To go willingly is to show strength or We want him to work harder, or may also occur without to, as in She had them read the letter or We may finish today.infinitive. -பவுல்
- இந்த infitive விளக்கம்/வரையறை ஐரோப்பிய மொழிகளுக்குத்தான். இதே விளக்கம் ஏவல் வினைக்கும் பொருந்தும் தமிழில். படித்தல் என்பது பெயர்ச்சொல் ஆகையால் அதில் இருந்து த்தல் என்பதை நீக்கிப் பின் க்கிறேன், க்கிறாய் என்று சேர்க்க வேண்டியதில்லை. படி+(பால், காலம் உணர்த்தும் பின்னொட்டுகள்). படித்தல், தேடுதல் முதலியவற்றுக்குக் கட்டாயம் தனிப் பக்கங்கள் அமைக்கலாம். verbal noun வகையைப் போலவே இன்னொரு, இன்னும் அழுத்தமான வினைமுற்றே பெயர்ச்சொல் நிலையில் நின்று இயங்கும் வகையும் உண்டு. இவற்றுக்கு வினையாலணையும் பெயர் என்று பெயர். உழைத்தவர் வெற்றி பெற்றனர் என்பதில் உழைத்தவர் என்னும் வினைமுற்று (!!) பெயர்ச்சொல்லாக்கப் பயன்படுகின்றது. இதனை வினையாலணையும் பெயர் என்பர். மேலும் ஆங்கிலத்தில் He went to the store to buy a hammer என்றால் அவன் சுத்தியலை வாங்கினானா இல்லையா என்று தெரியாது. தமிழில் அவன் கடைக்குப் போய் சுத்தியல் வாங்கினான் என்று உறுதி செய்யும்படிக் கூறவியலும். இது ஆங்கிலத்தில் ஒரே தொடரில் (and இல்லாமல்) கூறவியலாது. அதாவது தமிழில் போய் வாங்கினான் என்னும் வினையெச்ச வடிவம் வேறுபாடானது. இதையே ஓடிப்போய் வாங்கினான், நடந்துபோய் வாங்கினான். நொண்டிக்கொண்டேபோய் வாங்கினான் என்று விரிக்கலாம். கடைக்குப் போய், நன்றாகப் பார்த்து, கேள்விகேட்டு வாங்கினான் என்றும் நீட்டலாம். மேலும் வினையெச்சத்திலும் இறந்தகால, நிகழ்கால, எதிர்கால தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்று பல உள்ளன தமிழில். --செல்வா 00:43, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
வருகை, வரத்து போன்ற வடிவங்கள் வேற்றுமை உருபு ஏற்கும், வருதல், வரல் போன்ற வடிவங்கள் வழக்கமாக உருபுகள் ஏற்பதில்லை. "உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்" என்போமே தவிர, "உங்கள் வருதலை எதிர்பார்க்கிறேன்" என்பதில்லை. இற்றைய தமிழ் வழக்கில் "வேட்டையாடல்", "புகைபிடித்தல்" போன்ற இணைச்சொற்கள் பெரும்பாலும் தனித்து நின்று செயல்படும் பெயர்ச்சொற்கள் ஆகிவிட்டன. அங்கே "ஆடல்", "பிடித்தல்" வினைப் பண்பைக் காட்டுகின்றன. நிற்க.
- உண்மை, வினையைத் தெரிவித்தாலும் அவை பெயர்ச்சொற்களே. தொழிற்பெயர்களும் உருபுகள் ஏற்கும். உங்கள் உந்துதலால் நான் மேலும் முயலுகின்றேன் என்பதில் உந்துதல் (உந்து-> உந்துதல்)என்பது ஆல் என்னும் மூன்றாம் வேற்ருமை உருபு ஏற்பதைப் பார்க்கலாம். உந்துதலுக்கு நன்றி, நீங்கள் தந்த உந்துதலை மறவேன் என்று பிற வேற்றுமை உருபுகளையும் ஏற்கும். மனம் ஊன்றாமல் படித்தலால் பயன் இல்லை.இப்படி ஏறத்தாழ எல்லா தொழிற்பெயர்களுக்கும் சொல்லலாம். வருதல் என்பதைக் கூட இப்படி எல்லாவற்றையும் உதறித்தள்ளிக்கொண்டு முன்னுக்கு வருதலை நான் விரும்பவில்லை எனலாம். விடியலுக்காகக் காத்திருக்கின்றேன் என்பதைப் போல அவள் முன்னுக்கு வருதலைக் கண்டு அவள் தாயார் உள் நெகிழ்ந்தாள் என்றும் வரும். --செல்வா 00:43, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
அடிப்படையில் நம் இருவரின் கருத்தும் ஒன்றே என நினைக்கிறேன்: விக்சனரியில் தொழிற்பெயர்கள் இடம் பெற வேண்டும். ஏவல் வினை வடிவமும், தொழிற்பெயர் வடிவமும் தலைச்சொற்களாக இடப்படலாம் என்னும் கருத்தை முன்வைத்தேன். நீங்களோ தொழிற்பெயர் வடிவத்தைத் தலைச்சொல்லாக இட வேண்டியதில்லை என்கிறீர்கள். ஒத்துக்கொள்கிறேன். "வா" என்னும் இடுகையில் ஓரிடத்தில் அதற்கு "வருதல்", "வரல்" என்னும் இரு தொழிற்பெயர் வடிவங்கள் உள்ளதைக் காட்டலாமல்லவா? அதுபோலவே "Go" என்னும் இடுகையின் கீழ் "வா" என்னும் பொருள் தந்துவிட்டு, அடைப்புக் குறிகளுக்குள் (வருதல், வரல்) என்று காட்டலாமல்லவா? இவ்வாறு, விக்சனரியில் க்ரியா போன்ற தற்கால அகரமுதலியிலிருந்தும், (சிறிது பழைய) சென்னை அகரமுதலியிலிருந்தும் நல்லவற்றை ஏற்கலாம் என்பது என் கருத்து. மாற்றுக் கருத்துகளை வரவேற்கிறேன்.-பவுல்
- //தொழிற்பெயர் வடிவத்தைத் தலைச்சொல்லாக இட வேண்டியதில்லை என்கிறீர்கள்// இல்லை ஐயா, கட்டாயம் தலைச்சொல்லாக இடலாம். இவை பெயர்ச்சொற்களாயிற்றே (தொழிற்பெயர்!!). நட என்னும் வினைவழி நடத்தல், நடக்கை, நடப்பு, நடை, நடத்தை என்னும் சொற்களுக்குத் தனிப் பக்கங்கள் உருவாக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் இணைக்கும் விதமாகவும் நட என்பதைக்குறிக்க வேண்டும், என்கிறேன்.--செல்வா 00:43, 13 ஆகஸ்ட் 2010 (UTC).
தன்வினை, பிறவினை குறித்து நீங்கள் கூறுவதை ஏற்கிறேன்.-பவுல்
- நன்றி.--செல்வா 00:43, 13 ஆகஸ்ட் 2010 (UTC).
- வா, வருதல், வேட்டை, வேட்டையாடு, வேட்டையாடல் அனைத்தையும் தலைப்பாகத் தரலாம். பயன்பாட்டுடன் தந்தால் இவற்றின் வேறுபாடு புரியும். பழ.கந்தசாமி 23:13, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
- ஆம் ஒப்புகிறேன். --செல்வா 00:43, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
3) தாங்கள் கூறியது: "ஒரு தமிழ்ச்சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தாலும், மொழிபெயர்ப்புகள் தனியே கடைசியில் வருவதுதான் முறை என்பது என் கருத்து. ஏன் ஆங்கிலச்சொல்லுக்கு மட்டும் உடனே பக்கத்திலேயே தருதல் வேண்டும் என்னும் கேள்வி எழுகின்றது (இப்படியான சாய்வுகள் வேண்டாம்). மேலும் பல தமிழ்ச்சொற்களுக்கு ஒரே ஆங்கிலச்சொல்லோ (பிறமொழிச்சொல்லோ) சரியான மொழிபெயர்ப்பாக இல்லமலும் இருக்கலாம், ஆகவே, பலசொற்களைத் தர வேண்டியிருக்கலாம். அப்பொழுது பார்ப்பதற்கு ஒழுங்கற்ற விதமாகத் தெரியும். இதற்கு ஒரு தீர்வாக, சொற்பொருளுக்கு அருகே மீசுட்டுள்ள மொழிபெயர்ப்புகள் என்று ஒரு சுட்டியைத் தந்து தேவையான இடத்துக்கு அழைத்துச் சென்று (அதே பக்கத்தில்) அங்கே அச்சொல்லுக்கான பிறமொழிச் சொற்கள் அனைத்தையும் (ஆங்கில உட்பட) தரலாம்.-செல்வா
- என் கருத்து:
"ஆங்கிலச் சாய்வு" வேண்டாம் என்கிறீர்கள். ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் முதலில் தமிழில் பொருள் தர வேண்டும் என்பதில் எல்லாருக்கும் ஒத்த கருத்தே. தமிழ் பேசும் மக்கள், குறிப்பாக வலையகத்தில் உலாவுவோர் நன்மை கருதி தமிழில் பொருள் தந்தவுடனே ஆங்கிலத்திலும் பொருள் தரலாம் என்பது என் கருத்து. விக்சனரி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரக்கணக்கான சொற்களை இடுகை செய்துள்ளது/செய்யப்போகிறது. எனவே ஆங்கிலத்திற்குச் சிறப்பிடம் அளித்துள்ளது என்பதில் ஐயமில்லை. இப்பொருளில் "ஆங்கிலச் சாய்வு" ஏற்கெனவே உள்ளது. நான் கூறுவது பொருள் தெளிவு முன்னிட்டு மட்டுமே. எடுத்துக்காட்டாக, "படி" என்னும் பெயர்ச்சொல்லைப் பார்ப்போம். படிக்கட்டு, ஏணிப்படி, ஏழு ஆழாக்கு அளவு, அடிப்படைச் சம்பளத்துக்கு மேலாக வழங்கப்படும் தொகை, நகல், பிரதி என்று 6 பொருள்களைத் தமிழில் வரிசைப்படுத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். அதற்குக் கீழே, step, a certain measure, allowance, copy என்று நான்கு பொருள்கள் ஆங்கிலத்தில் கொடுத்தால் "step" என்பதற்கு இணையாக படிக்கட்டும் ஏணிப்படியும் உள்ளன என்றும், copy என்பதற்கு இணையாக நகலும் பிரதியும் உள்ளன என்றும் உடனடியாகக் கண்டுகொள்ள இயலாதே என்பதுதான் நான் குறிக்கும் இடர்ப்பாடு. இது பெரிய சிக்கல் இல்லை என்றும், சுட்டிகள் வழி தீர்வு காணலாம் எனவும் நீங்கள் கூறுகிறீர்கள். அது நன்றே. வணக்கம்!--பவுல்-Paul 16:24, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
- தமிழ்ச்சொல்லுக்கு ஆங்கிலப் பொருள்நாடியும், ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ப் பொருள்நாடியுமே பெரும்பாலோர் இங்கு வருகின்றனர் என்பதால், ஆங்கிலம் பெரும்பாலோருக்குப் பாலமாக அமைந்து அவர்களுக்குத் தமிழ்ச்சொல்லின் பொருளைத் தெளிவுபடுத்தமுடியும் என்பதாலும், அதற்குச் சற்று சாய்வு கொடுத்தால் தவறில்லை என்றே தோன்றுகிறது. பழ.கந்தசாமி 23:13, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
- இது பற்றித் தனியாக கீழே எழுதுகிறேன்.--செல்வா 00:43, 13 ஆகஸ்ட் 2010 (UTC)