உள்ளடக்கத்துக்குச் செல்

வேழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) வேழம்

 1. யானை களிறு பிடி வேழம் பகடு கைமா
 2. நாகம்
 3. மகுடி
 4. தடி
 5. கயிறு
 6. கரும்பு
 7. மூங்கில்
 8. பீர்க்கு
 9. நாணல்
 10. விளாம்பழத்துக்கு வருவதொரு நோய்
 11. ஒருவகைப் பூச்சி
 12. கொறுக்கை
 13. இசை
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. elephant
 2. serpent
 3. a kind of hautboy used by snake charmers and by jugglers
 4. stick
 5. rope
 6. sugar-cane
 7. bamboo
 8. sponge gourd
 9. Kaus
 10. A disease affecting the fruit of the wood-apple
 11. An insect
 12. European bambooreed
 13. music
பயன்பாடு
 • வேழம் என்ற தேரை விளாம்பழத்துக்குள் பாய்ந்தால், பழம் உள்ளீடு இல்லாமல் வெறும் ஓடாகப் போய்விடும்.
திருப்புகழ் 653

இலக்கியம்

 • வேழத்தில்பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது(நல்வழி 33, ஔவையார்) - யானையை ஊடுருவிப் பாயும் வேல் பஞ்சுக்குக்குள் பாயாது.
 • இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன்; பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்பு சீர் வேழம் என்றேன்; தின்னும் என்றாள்
நற் பகடு என்றேன் ; உழும் என்றாள்
கம்பமா என்றேன்; நற் களியாம் என்றாள்
நான் கைமா என்றேன்; சும்மா கலங்கினாளே!
(பாணன்-பாணினி-சங்ககாலம்)
யானை என்பதை எத்தனை வகையாகத் தமிழில் சொல்லலாம் என்பதை இப்பாணர் பாட்டில் காணலாம் ...
 • மறையோன் உற்ற வான்துயர் நீங்க
உறைகவுள் வேழக் கையகம் புக்கு
(வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை)
 • வேழ முண்ட விளாகனி யதுபோல-வேழம் என்ற பழங்களுக்கு ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல
(திருப்புகழ் 653)
 • ... தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிட்க்
களித்துண்டு கருணே என்னும்
வெள்ளதம் பொழிசித்தி வேழம்,
(தறுகட்பாசக் கள்ள வினைப் பசுபோதம்-கொடுமையையுடைய பாசமாகிய கள்ளத் தன்மையையுடைய வினைக்குக் காரணமாகிய ஜீவபோதம்; சிற்றறிவு அல்லது அறியாமை.)
(சித்தி வேழம்)
 • வேழப் பழனத்து நூழிலாட்டு,
கரும்பின் எந்திரம், கட்பின், ஓதை - :(மதுரைக் காஞ்சி வரி 267)
 • மனைநடு வயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும்என் தடமென் தோளே.- வேழன்ற மூங்கில் போல இருக்கறதை சுற்றி
 • கரைசேர் வேழம் கரும்பில் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்க தில்லஎன் தடமென் தோளே - வேழம்னு சொல்றமே அந்த வகைப் புல்
 • பரியுடை நன்மான் பொங்[கு]உளை அன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகருந்
தண்டுரை ஊரன் பெண்டிர்
துஞ்சூர் யாமத்தும் துயிலறி அலரே.- வேழம்ற கொடியில இருக்கற புல்
(வேழப்பத்து 11)
 • கொடிப்பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கும்
மணித்துறை ஊரன் மார்பே
பனித்துயில் செய்யும் இன்சா யற்றே. - வேழம்ன்ற கொறுக்கச்சிக்கொடி
 • மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழை
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழம் மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே. -நாணல்ன்ற வேழம் துணை
 • ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை உள்ளிப்
பூப்போல் உன்கண் பொன்போர்த் தனவே. - வேழம்ற நாணலோட தண்டிலதான்
 • புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகில் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே. - வேழத்தோட பூ
 • இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமருங் கழனி ஊரன்
பொருந்துமலர் அன்னஎன் கண்ணழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே. - வேழம்ற நாணல்
 • எக்கர் மாத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங் கமழும் தண்பொழில்
வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரில் கண்பனி உருமே.-வேழத்தோட வெள்ளையான பூக்களோட
 • அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்புகன்[டு] அன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி ஊரனை உள்ளிஎன்
இறையே எல்வளை நெகிழ்பு ஓடும்மே. - மூங்கில் போல இருக்கற வேழம்
(வேழப்பத்து 14-17)
 • பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.- மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன்
(ஐந்தாம் திருமுறை)
 • மலைநாடு வேழம் (யானை) உடைத்து.
சோழ வளநாடு சோறுடைத்து.
பாண்டி நாடு முத்துடைத்து.
தொண்டைநாடு சான்றோர் உடைத்து.-ஒளவை வாக்கு
(மலைநாடு வேழம் உடைத்து)
 • பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக்
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சமா
தாய் தலை அன்பின் முன், நிற்குமே? தகைந்து பாய்ந்து
தோய் தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர். [24] - (சிவந்த கண்ணுடன் அவ்வியானை திரிந்து)
 • கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்து
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த
வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக
ஐவரைக் கொன்று நின்றார்; அருவரை அனைய தோளார். [25] - (கரியமலை போன்ற அவ்வியானை புரள)
 • தூரியத் துவைப்பும் முட்டும் சுடர்ப் படை ஒலியும் மாவின்
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர்ச் சீறும்
வீரர் தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக்
காருடன் கடைநாள் பொங்கும் கடல் எனக் கலித்த அன்றே. [32] - (யானைகளின் முழக்கமும் பெரிய தேர்களின்)
 • மன்னவன் தன்னை நோக்கி, வானவர் ஈசர் நேசர்,
‘சென்னி! இத் துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து
பன்னக ஆபரணர் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னை முன் பறித்துச் சிந்தத் தரைப் படத் துணித்து வீழ்த்தேன்’. [40] - (பெரிய யானை பறித்துச் சிந்தியதனாலே)
(எறி பத்த நாயனார் புராணம்)
 • வேழக் கரும்பினொடு மென் கரும்பு தண் வயலில்
தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மை யதாய்
வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொன் பதியில்
ஈழக் குலச் சான்றார்; ஏனாதி நாதனார்.- (நாணற்கரும்பினோடு மென்கரும்பும் தாழும்படி)
(ஏனாதி நாத நாயனார் புராணம)
 • செங்கண் வெள் ஏற்றின் பாகன்; திருப் பனந் தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு கும்பிட, அரசன் ஆர்வம்
பொங்கித் தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமைக்
கங்குலும் பகலும் தீராக் கவலை உற்று அழுங்கிச் செல்ல.[23] - (தமது யானை முதலியவை யெல்லாம் பூட்டவும்)
(குங்குலியக் கலய நாயனார் புராணம்)
 • இவ் வகை பலவும் எண்ணி `இங்கு இனி அரசர் இல்லை;
செய்வகை இதுவே' என்று தெளிபவர், `சிறப்பின் மிக்க
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றுஅக்
கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார்' என்று. [30] - (கரியமலைபோன்ற யானையைக் கண் கட்டிவிட்டால்)
 • வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று,
வாழ்வு உற்று உலகம் செய் தவத்தினின், வள்ளலாரைச்
சூழ் பொன் சுடர் மா மணி மா நிலம் தோய, முன்பு
தாழ்வு உற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே. [34] - (பட்டத்து யானை அவ்விடத்தில் விரைவாக நடந்துபோய்)
 • மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது
தன்னின்றும் இழிந்து, தயங்கு ஒளி மண்டபத்தில்,
பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால்
மன்னும் குடை நீழல் இருந்தனர்; வையம் தாங்கி.[44] - (வாயிலில் யானை மேனின்றும் இறங்கி)
(மூர்த்தி நாயனார் புராணம்)
 • கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித்
தாடத்தின் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின்
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம். [110] - (மதயானையின் உருவத்தோடு வருகின்றதொரு)
 • தண்டமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரண்ஆகக்
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புஉறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம். [117] - (அந்த யானை நிலத்தில் வீழ்ந்து வணங்கி)
 • ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத்
தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடர்த்துத் திரித்து
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே. [118] - (அந்த யானை அங்குநின்றும் பெயர்ந்து போகவே)
(திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்)
 • வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும்
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும்
மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர். [2] - (யானைக்கோடுகளிற் பிறக்கும் விளக்கமுடைய முத்துக்களையும்)
(விறன்மிண்ட நாயனார் புராணம்)
( மொழிகள் )

சான்றுகோள் ---

University of Madras Lexicon வலைத் தமிழ் [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேழம்&oldid=1985362" இலிருந்து மீள்விக்கப்பட்டது